பெங்களூரு: கர்நாடகா மாநில சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பிரபல கல்லூரியின் சீருடையை அணிந்த மாணவரும் மாணவியும் லிப்-லாக் முத்தமிட்டு கொள்கின்றனர். இருவரையும் அருகிலுள்ள மாணவர்கள் உற்சாகப்படுத்துகின்றனர்.
அதில், ஒரு மாணவர் அடுத்து யார் முத்தமிட வருகிறீர்கள் என்று கேட்கிறார். அதுமட்டுமல்லால் அருகில் ஒரு மாணவி மற்றொரு மாணவரின் மடியில் படுத்தப்படி காணப்படுகிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். ஒரு மாணவரும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவிக்கையில், "இந்த வீடியோ 6 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
இந்த வீடியோவில் காணப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடந்த வாரம் வாட்ஸ்அப்பில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து புகார்கள் ஏதும் வரவில்லை. இருப்பினும் இதனையறிந்த கல்வி நிர்வாகம் மாணவர்களை கண்டித்து, அனைவரையும் இடைநீக்கம் செய்துள்ளது.
வீடியோ எடுத்த மாணவரை பிடித்து விசாரித்துவருகிறோம். சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டுபிடித்து ஆலோசனை வழங்க உள்ளோம்" என்றார். இந்த வீடியோவால் சம்பந்தப்பட்ட கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல்துலக்காமல் முத்தம் கொடுத்த கணவன் - தடுத்த கோவை பெண் வெட்டிக்கொலை