புதுச்சேரி: கல்லூரியில் அடிப்படை வசதி கோரி கல்லூரி முதல்வரே தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கிவருகிறது தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி மிகவும் பழமையானது. இங்கு 4 ஆயிரத்து 500 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அதிகளவில் இருப்பினும், வகுப்பறைகள், இருக்கை, கழிவறை போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை.
எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் அற வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள தாகூர் சிலை முன்பு கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் மற்றும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் 2018ஆம் ஆண்டு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், காலியாக இருக்கும் கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.