தெலங்கானா: சித்திப்பேட் மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்திப்பேட் காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதா, "தற்கொலை செய்து கொண்ட நரேஷ், சித்திப்பேட் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஜீவன் பாட்டீலுக்கு துப்பாக்கி ஏந்திய படி பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தார். மேலும், அவர் சின்னகோடூரில் உள்ள ராமுனிபாடல் பகுதியில் மனைவி சைதன்யா, மகன் ரேவந்த், மகள் ஹிமா ஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று (டிச.15) நரேஷ் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். முன்னதாக, நரேஷ் தான் கொண்டு வந்த 9mm பிஸ்டல் துப்பாக்கியால் மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நரேஷ் உடன் வேலை பார்க்கும் ஊழியர், நரேஷ் வேலைக்கு வரவில்லை என்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, 4 பேரும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், சம்பவ இடத்தில் இருந்த தடயங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதில், ஏற்பட்ட கடன் தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்டை தீவிரமடைந்ததால், நரேஷ் தனது குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளார். மேலும், மனைவி சைதன்யாவையும் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தோனி Vs ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார்! ரூ.100 கோடி எங்க போச்சு? முழுத் தகவல்!