மோர்பி: குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பியில் அமைந்துள்ள தொங்கு பாலம் நேற்று (அக்-30) இடிந்து விழுந்ததில் 132 பேர் உயிரிழந்தனர். குஜராத்தின் மஞ்சு ஆற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலமானது கடந்த மார்ச் மாதம் முதல் பயன்படுத்த தடை செய்யப்பட்டது. அதன் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
தனியார் நிறுவனத்தால் கடந்த 7 மாதங்கள் பழுதுபார்க்கும் பணி நடந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்காக மீண்டும் இப்பாலம் திறக்கப்பட்டது. ஆனால் பாலத்தை மீண்டும் திறப்பதற்கு முன் வாங்க வேண்டிய நகராட்சியின் தகுதி மதிப்பீட்டு சான்றிதழை பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மோர்பி நகரில் இந்த நூறாண்டு பழமை மிக்க பாலம் அமைந்துள்ளது.
இது குறித்து மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா கூறுகையில், “ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திற்கு 15 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாலத்தின் பராமரிப்பு பணிகள் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், புனரமைப்பிற்காக மோர்பி பாலம் மூடப்பட்டது. இதனையடுத்து சென்ற அக்டோபர் 26 அன்று குஜராத்தி புத்தாண்டு தினத்தையொட்டி புதுப்பிக்கப்பட்ட பாலம் மீண்டும் திறக்கப்பட்டது” என கூறினார்.
இதையும் படிங்க:மோர்பி பால விபத்தில் பெற்றோரை இழந்த நான்கு வயது குழந்தை..