புதுச்சேரிக்கு தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் முடிவு அடைய இருக்கும் நிலையில், புதுச்சேரியில் அமைச்சர்கள் யாரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கு மத்திய பாஜக அரசு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் கடும் நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.
என்னதான் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா என்று காரணம் காட்டினாலும், துணை முதலமைச்சர் பதவி பாஜகவுக்கு கட்டாயம் வேண்டும் என்பதே பிரதான நெருக்கடியாகும்.
பாஜகவின் சித்து விளையாட்டு
குறிப்பாக, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், ஆறு இடங்களை பாஜகவும் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கரோனா காரணமாக மருத்துவமனையில் இருந்த நேரம் பார்த்து, அவசர அவசரமாக மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை மத்திய பாஜக நியமித்தது.
இதன் மூலம் புதுச்சேரி பாஜக தனது பலத்தை 9ஆக உயர்த்திக்கொண்டது. இது ரங்கசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் பாஜக தன் பக்கம் வளைத்து போட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தனது பலத்தை பாஜக 12ஆக மாற்றிக்கொண்டது. இது பிரதானக் கூட்டணிக் கட்சியான என்.ஆர். காங்கிரஸை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
விளையாட்டுக்கு எண்ட் கார்டு போட்ட ரங்கசாமி
இந்த நடவடிக்கைகள் காரணமாகவே தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் முடியும் நிலையிலும் அமைச்சர்கள் யாரும் இதுவரை பதவி ஏற்க முடியவில்லை. துணை முதலமைச்சர் பதவி, 2 அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி ஆகியவை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து அடம் பிடிப்பதும், துணை முதலமைச்சர் பதவி என்று ஒன்று புதுச்சேரியில் இல்லவே இல்லை எனவும், ஆகவே 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் ஆகிய பதவிகள் மட்டுமே பாஜகவுக்கு தர முடியும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக இருந்துள்ளார். கரோனா வலியில் ஏற்கெனவே பெரிதும் அவதிப்பட்டு வரும் புதுச்சேரி மாநில மக்களுக்கு, இந்த அதிகாரப் பகிர்வு மோதல் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நேற்று (மே 27) என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய எம்.எல்.ஏ.-க்கள் ரகசிய கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் ஐந்து மணிநேரம் தொடர்ந்து நடந்தது. இக்கூட்டத்தில், பாஜக கோரிக்கையில் துணை முதலமைச்சர் பதவி நிராகரிக்கப்பட்டது. 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிக்கு மட்டுமே ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
விரைவில் அமைச்சரவை
இதுகுறித்து புதுச்சேரி பாஜக மேலிடப்பார்வையாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் பின்னர் ஆலோசிக்கப்பட்டது. பாஜக கிரீன் சிக்னல் அனுப்பியதையடுத்து, நல்ல நாளில் அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர். இதில் பாஜக 2 அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் 2 அமைச்சர்கள், சபாநாயகராக தேனி ஜெயகுமார் தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திருப்பதி தரிசனத்திற்கு சிக்கல்: 2 மாத காலத்திற்கு அலிபிரி பாதையை மூட முடிவு