ஆந்திரா: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திராவில் சங்கராந்தி விழா கொண்டாடப்படும். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். இந்தப்போட்டிக்கு அரசு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தடையை மீறி சேவல் சண்டை ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் முழுவதும் சேவல் சண்டைகள் இன்று (ஜன.15) நீதிமன்றத்தின் தடையை மீறி காக்கிநாடா, கோனாசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, எலுரு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்தது. இந்த சேவல் சண்டைக்கு YSR காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர். சேவல் சண்டையை தடுக்கும் பணியில் ஆந்திர மாநில காவல் துறையினர் ஈடுபட்டாலும் அதன் மூலம் சேவல் சண்டை தடைபடுவதில்லை.
அரசியல் கட்சியினர் ஆதரவு: சேவல் சண்டைக்கு அரசு நேரடியாக தடைவிதித்தாலும் பல்வேறு இடங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சேவல் சண்டைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கோனாசீமா மாவட்டம், ரவுலபாலம் மண்டலம், வெதுரேஸ்வரம் சாலையில், கொத்தபேட் எம்எல்ஏவும், அரசு கொறடாவுமான சிர்லா ஜக்கிரெட்டி, போட்டிகளை கட்டுப்படுத்தும் காவல் துறையினருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாபுரம் மண்டலம் வன்னெசிந்தாபுடியில் உள்ள ஜெகன்னா ஆகிய ஆளுங்கட்சித் தலைவர்களும் சேவல் சண்டை வளையம் அமைத்துள்ளனர். இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டம், அனபர்த்தியில் எம்எல்ஏ சத்தி சூர்யநாராயண ரெட்டியும், கோகாவரத்தில் எம்எல்ஏ ஜோதுலா சாந்திபாபுவும் சேவல் சண்டையை தொடங்கி வைத்தனர்.
கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை: அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார்கள். சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிகளில் பந்தயம் கட்டி போட்டியை நடத்துவார்கள். இதற்காகப் பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள வருவார்கள். இதனையடுத்து கூட்டு மேற்கு கோதாவரி மாவட்டம், கல்லா மண்டல் சீசாலியில் பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் பந்தய பணங்கள் எண்ணப்பட்டன.
பீமாவரம் மண்டலம் தேகாபுரம், அக்கிவீடு மண்டலம் தும்பகடப்பா ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வரை கபடிப் போட்டிகள் நடைபெற்றன. கபடி போட்டி நடைபெற்ற வளாகம் சேவல் சண்டை பந்தயங்களுக்கான இடமாக மாறியது. நிடமறு, சீசாலி, தேகபுரம் ஆகிய இடங்களில் டிஜிட்டல் திரையில் போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தயம் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் பட்டயகுடம் மண்டலம் துடுக்கூரில் பழங்குடியினரின் பாரம்பரிய சேவல் சண்டை பந்தயத்தை எம்எல்ஏ டெல்லம் பாலராஜு தொடங்கி வைத்தார். கோதாவரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போகி தினமான நேற்று(ஜன.14) நடந்த பந்தயம், சூதாட்டம் என அனைத்திலும் சுமார் ரூ.400 கோடி கை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணா மற்றும் என்டிஆர் ஆகிய இரு மாவட்டங்களிலும் சேவல் சண்டை பந்தயம் சுதந்திரமாக நடந்தது. இரு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட பந்தய மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆந்திர மாநில ஆளுங்கட்சி தலைவர்களும் சேவல் சண்டைக்கு ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக பெனமலூர் தொகுதிக்கு உட்பட்ட எடுபுகல்லுவில், 30 ஏக்கரில், ysr காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் பந்தய மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. 3 மற்றும் 5 பந்தயங்களில் வெற்றி பெற்றால் ஸ்கூட்டி பரிசாக வழங்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்புடன் சேவல் சண்டை: என்டிஆர் மாவட்டம், திருவூரு மண்டலத்தில் உள்ள மல்லேலா அருகே உள்ள மாந்தோப்பில் சேவல் சண்டை பந்தய வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தோட்டங்களில் கூடாரம் அமைத்து சூதாட்ட ஆபரேட்டர்களை அழைத்து வந்து சூதாட்டம் ஆடியுள்ளனர். வேறு யாரும் உள்ளே செல்ல முடியாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த பந்தய மையத்திற்குள் செல்ல நுழைவுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மையங்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பவுன்சர்கள் மற்றும் தனியார் செக்யூரிட்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆளுங்கட்சி தலைவர்களின் சிறப்பு ஏற்பாடுகள்: பாபட்லா மாவட்டத்தில் ஆளும் கட்சி ஒய்.சி.பி., தலைவர்கள் தலைமையில் பிரமாண்ட சேவல் சண்டை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போகி அன்று துவங்கிய இப்போட்டி காணும் பொங்கல் வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அமைச்சர் மெருகு நாகார்ஜுனாவின் சொந்த தொகுதியான வேமுரு, பட்டிப்பொலு மண்டலம் பல்லேகோனா, கொல்லூர் மண்டலம் ஈப்புறு, சுண்டூர் மண்டலம் வேடபாலம் ஆகிய இடங்களில் சேவல் சண்டைக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேவல் சண்டை மைய அமைப்பாளர்கள் தொலைதூர இடங்களில் இருந்து வரும் பந்தயக்காரர்கள் தங்குவதற்கு விடுதிகள் மற்றும் லாட்ஜ்களில் அறைகளை முன்பதிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. மேலும் சில வீடுகள் விருந்தினர் மாளிகைகளாக மாற்றப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் பிரச்னை ஏற்படாத வகையில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காவல் துறையினரும் இந்த சேவல் சண்டையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சி ஆதரவுடன் சேவல் சண்டை நடப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேவல் சண்டையைத் தடுக்க வந்த காவல் துறையினரை கொத்தபேட் எம்எல்ஏ சிர்லா ஜாக்கி ரெட்டி கடுமையாக சாடியதும், மிரட்டல் விடும் தொனியில் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டிய அவனியபுரம் ஜல்லிக்கட்டு - வீரர்கள் கொண்டாட்டம்