புதுச்சேரி: புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மார்ச் 17) நடைபெற்ற புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், “புதுச்சேரியில் அனைத்து மகளிரும் அரசுப் பேருந்துகளில் இனி இலவசமாகப் பயணிக்கலாம். விதவை தாய்மார்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் உதவித்தொகை, இனி வரும் காலங்களில் 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பூங்கா மற்றும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே பயன்பெற்று வருவதால், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மாநில சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதி வழங்கப்பட்ட பிறகு, அந்த பஞ்சாலைகள் இடத்தில் வேறு தொழில்களை தொடங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். மூடப்பட்டுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை, தனியார் பங்களிப்புடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் திடீரென்று பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 7,500 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் பட்டியல் இன பெண்களுக்கு மட்டும் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில்தான் தற்போது புதுச்சேரியில் அனைத்து பெண்களும் இலவசப் பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, 2021 மே 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது அவர் 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்றுதான், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்னும் திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட அரசுப் பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளே (மே 8, 2021) நடைமுறைக்கு வந்தது. இதற்காக இரவோடு இரவாக அனைத்து தகுதி வாய்ந்த பேருந்துகளிலும், ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் பேருந்துகளின் கண்ணாடி முகப்பில் ஒட்டப்பட்டது.
இதனையடுத்து பேருந்துகளின் முகப்பில் பிங்க் நிற வர்ணம் பூசப்பட்டு, இலவச மகளிர் பேருந்தை எளிமையாகக் கண்டறிவதற்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பேருந்து முழுமையும் பிங்க் நிறத்தில் மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தினை மாநில திட்டக்குழு, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.
இதன்படி இந்த திட்டத்தின் மூலம் மாதம் சராசரியாக 888 ரூபாய் பெண்கள் சேமிப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. அதேநேரம் இந்த தொகையை வைத்து வீட்டுச் செலவுகளை செய்வதாகவும் ஆய்வில் வெளி வந்தது. எனவே, இந்த திட்டம் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓசி டிக்கெட் வீடியோ விவகாரம்; பாட்டி மீது வழக்கு இல்லை