புதுச்சேரி: ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர் தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் சட்ட மாமேதை அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாள் இன்று (டிசம்பர் 6) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 65ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 6ஆம் தேதி, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
மேலும் புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலமைச்சர் மரியாதை
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அக்கட்சி தலைவர் ஏவி. சுப்பிரமணியம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து திமுக, விசிக, மதிமுக சார்பிலும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: 65ஆம் ஆண்டு நினைவு: அதிகார குரலற்றவர்களின் அறிவாயுதம் அண்ணல் அம்பேத்கர்