டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நேற்று (செப் 24) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். ஜிதேந்தர மான் கோகி எனும் ரவுடியை குறிவைத்து அவரது எதிர்தரப்பு மேற்கொண்ட தாக்குதலில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பலமாக உள்ள நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவம் அரங்கேறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தலைமை நீதிபதி ரமணா, "இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி என் படேலிடம் பேசினேன். காவல்துறையினர், பார் அமைப்பு நீதிமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த சம்பவம் நீதிமன்ற அலுவல்களை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்" என்றார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ரவுடி கோகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமிக்கு கெளரவ டாக்டர் பட்டமளித்த தமிழ் பல்கலைக்கழகம்