அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில்(LGBI) 80 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியை அவமதிக்கும் விதமான செயல் அரங்கேறியுள்ளது. அந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் CISF அதிகாரிகள் நாகாலந்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.
அந்த மூதாட்டிக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிலேட் பொருத்தப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அதற்கு அத்தாட்சி தேவை எனக் கூறி அந்த மூதாட்டி உடைகளை முழுமையாக களைய வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியுடன் வந்த அவரது மகள் டோலி கிகோன், இந்த சம்பவத்தை ட்விட்டிரில் பதிவிட்டு நீதி கோரியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியோரை இவ்வாறுதான் நடத்துவதா என கேள்வி எழுப்பியுள்ள அந்த பெண் இது தொடர்பாக புகார் ஒன்றை எழுத்துப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மகள் டோலி கிகோனுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதில் கூறியுள்ளார். டோலி கிகோன் ஒரு மருத்துவர் ஆவார்.
இதையும் படிங்க: கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட பெண் - போலீஸ் விசாரணை