கிஷன்கஞ்ச் (பீகார்): பீகாரின் கிஷன்கஞ்சில் உள்ள இந்திய - நேபாள எல்லையில், சஷாத்ரா சீமா பால் (Sashastra Seema Bal - SSB) அதிகாரிகளால் சந்தேகத்தின் அடிப்படையில் சீன நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் உளவாளியா? என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்றது.
விசாரணையில், அவரிடம் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள முகவரியுடன் கூடிய இந்திய பாஸ்போர்ட்டை போலீசார் கைப்பற்றினர். அதில் அவரது பெயர் கோம்போ தமாங் என இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட அந்த பாஸ்போர்ட் போலியானது எனவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், அந்த நபரிடம் இருந்து சீன விசா, இந்திய மதிப்பிலான 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மற்றும் நேபாள மதிப்பிலான 62 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், சில ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த நபரை கிஷன்கஞ்ச் அடுத்த தாக்குர்கஞ்ச் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
அவர் உளவாளியாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எஸ்எஸ்பி அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இந்திய பாஸ்போர்ட், சீன விசா மற்றும் இந்திய - நேபாள ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில், அது போலியானது என்பதை டார்ஜிலிங் போலீசார் உறுதி செய்தனர்.
மேலும், அதில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரியும் போலியானது என கண்டறியப்பட்டது. இதில் இருந்தே அவரது நோக்கம் இந்தியாவிற்குள் நுழைய வேண்டும் என்பது தான் எனத் தெளிவாக தெரிந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்" எனத் தெரிவித்தார்.
மேலும், விசாரணையில் அந்த நபர் எல்லைப் புறக்காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்பி அதிகாரிகளுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த நபர் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் மேல் நடவடிக்கைக்காக மேற்கு வங்க மாநிலம் கோடிபாரி போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!