இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச எல்லை - சீன நாட்டின் எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாசோ கேம்ப் என்ற பகுதியில், சீனா ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.
அவை மக்கள் குடியிருக்கும் வீடுகள் இல்லை, ராணுவப் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் கூறியது. இருந்தபோதும், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில், சீனா தொடர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தனது எல்லைப்பகுதிகளில், சீனா ஆப்டிகல் ஃபைபர் கேபிளை அமைத்து 5ஜி சேவையை வழங்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை இந்திய பகுதிகளுக்குள்ளும் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அதிவேக தரவுகள் பறிமாற்றம் மற்றும் சிறந்த தொலைபேசி இணைப்பை வழங்கும் நோக்கில், சீனா இந்த தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம் இந்தியாவால் எல்லைப்பகுதிவரை ஃபைபர் கேபிளை அமைக்க முடியவில்லை. இதனால் தகவல் பரிமாற்றத்திற்கு இந்திய ராணுவத்தினர் நெட்வொர்க்கை தேடி அலையும் நிலையே நீடிக்கிறது.
இதுதொடர்பாக அருணாச்சல பிரதேச மாநில அரசிடம் கேட்டபோது, எல்லைப் பகுதியில் இணைய நெட்வொர்க்கை மேம்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளதாகவும், அதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஷோபியானில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை வீரர் படுகாயம்