பெய்ஜிங் (Beijing): சீனாவில் இருந்து பரவியதாகக் கருதப்படும் கரோனா தொற்றிலிருந்து இன்னும் உலகம் விடுபடவில்லை. இந்த நிலையில், தற்போது உலகின் முதல் முதலாகப் பறவைக் காய்ச்சல் தொற்று சீனாவிலுள்ள ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளச் சம்பவம் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
சீனாவின், ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு 'H10N3' பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜூன்.1) தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜென்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளதாக, ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு ஜியாங்சு (Zhenjiang) மாகாணத்தில் இருந்து H10N3 பறவைக் காய்ச்சலால், உலகின் முதல் மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக, சீனா அரசு தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும், இந்தத் தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் என்றும், இது பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிகக் குறைவு என்றும் சீன சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு மே 28 அன்று எச்10என்3 (H10N3) பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது விவரிக்கப்படவில்லை.
எச்10என்3 ( H10N3) மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக, இதற்கு முன்னர் உலகளவில் பதிவாகவில்லை. H10N3 என்பது கோழிப் பண்ணையில் காணப்படும் நோய்க்கிருமி என்றும், ஒப்பீட்டளவில் குறைவான வீரியம் கொண்ட விகாரமாகும், மேலும் இது பெரியளவில் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பறவை காய்ச்சலில், பலவிதமான விகாரங்கள் உள்ளன. பொதுவாக கோழிப்பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு சில தொற்றுகள் ஏற்படுகின்றன.