பெய்ஜிங்: சீனா, மூன்று ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜனவரி 8) முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்துள்ளது. அதோடு சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் கரோனா பரவல் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் நிரம்பி காணப்படுவதாகவும், படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்பட்டு தினசரி உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் கரோனா பரவலின் உண்மைத் தன்மையை அறியும் வகையில், கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை வெளியிடக் கோரி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது. இதனிடையே வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதோடு சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று (ஜனவரி 8) முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கின், குவாங்ஷூ, சென்ஷன் நகர விமான நிலையங்களுக்கு கனடாவின், டோரண்டோ மற்றும் சிங்கப்பூரில் இருந்து 2 விமானங்கள் வந்தடைந்தன. இரு விமானங்களில் வந்த 300-க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுக்கு கரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதேபோல, சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியமான ஹாங்காங்கில் இருந்தும் எல்லைத் தாண்டி பயணம் மேற்கொள்ள மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் சீனாவில் உள்ள தங்களது உறவினர்களை காணும் ஆர்வத்தில் ஹாங்காங் விமான நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
சர்வதேச பயணிகளுக்கான கரோனா கட்டுபாடுகள் மற்றும் பரிசோதனை மேற்கொள்வதில் இருந்து கடந்த மாதம் தளர்வு அளித்த சீன அரசு, கரோனா கட்டுப்பாட்டு தடுப்புகளில் வைக்கப்பட்டு உள்ளவர்களையும் விடுவிக்கக் கோரி உத்தரவிட்டது. சீனா வரும் சர்வதேச பயணிகள் தூதரகம் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் வழங்கும் சுகாதார கோட்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதேநேரம் பயணத்திற்கு முன்பாக 48 மணி நேரத்தில் ஆர்டிபிஆர் பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்று கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை கொண்டாட்டங்கள் மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து சீன மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜியாங்சி மாகாணத்தில் அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை