குழந்தை நட்சத்திரம் ஆலமினின் தாயார் யாஸ்மீன் முபராக்கிற்கு (34), சில நாள்களுக்கு முன்னர் கரோனா உறுதி செய்யப்பட்டது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த யாஸ்மீனுக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த யாஸ்மீனின் சிகிச்சைக்கு, ஆலமின் குடும்பத்தினரால் நிதி திரட்ட முடியவில்லை.
இதையறிந்த ஆலமினுடன் நடித்த நடிகர் நவீன் சங்கரின் மனைவி சவிதா தாஸ், யாஸ்மீனின் குடும்பத்திற்கு உதவ முன் வந்தார். இதற்காக, வெறும் 10 நிமிடங்களில், வீணான உணவுப் பொருள்கள் மூலம் சவிதா வரைந்த உணவு ஓவியம் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. ஆனால், யாஸ்மீனுக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை. பல தடைகளுக்குப் பின்னர் யாஸ்மீன் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
9 மாத கர்ப்பிணி யாஸ்மீனுக்கு கடந்த மே 13ஆம் தேதி அவரச கால அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த யாஸ்மீனால், கரோனா காரணமாக தன் குழந்தையைப் பார்க்கக் கூட முடியவில்லை. தன் தங்கையுடன் தன் தாயார் எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என ஆலம் காத்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (மே.18) சிகிச்சைப் பலனின்றி ஆலமின் தாயார் உயிரிழந்தார்.
சினிமா துறையில் வளர்ந்து வரும் திரைக் கலைஞர் ஆலம் என்கிற ஆலமின், முன்னணி தமிழ் நடிகர்களான கமல், அஜித் ஆகியோருடன் நடித்திருக்கிறார். திரைக்கு வரவிருக்கும் 'இந்தியன் 2' படத்தில் கமலுக்குப் பேரனாக நடித்திருக்கிறார். இவரது குடும்பத்தில் ஆலமினிற்கு தான் முதலில் கரோனா இரண்டு வாரங்களுக்கு முன்பு உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து, மற்றவர்களும் கரோனா பாதிப்புக்குள்ளாகினர். ஆலம் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தாயார் இறப்பு குறித்து இன்னமும் ஆலமினுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.