ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் கரன்பூரை தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த நிலையில் அங்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கபப்ட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் தேவைப்பட்டதில், பாஜக 115 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் தாண்டிய நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அங்கு தொடர் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், நேற்று (டிச. 12) ஜெய்ப்பூரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற குழு ஆலோசனைக் கூட்டத்தில் பஜன்லால் சர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது ராஜஸ்தான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலையே புரட்டிப் போட்டது.
மேலும், தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் சர்மாவுக்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த பஜன்லால் சர்மா, முதலமைச்சராக பதவியேற்பது குறித்து உரிமை கோரினார்.
இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள ராம்நிவாஸ் பாக் பகுதியில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் மும்முரம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா உள்ளிட்டோர் கேபினட் உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதவி ஏற்பு விழாவை தொடர்ந்து சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் சட்டமன்றத்தை கூட்ட பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பல்கலைக்கழக பட்டதாரி - ராஜஸ்தான் முதலமைச்சர் - யார் இந்த பஜன்லால் சர்மா?