சென்னை: சாமானிய மக்கள் முதல் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அரசியல் வர்க்கம் வரை அனைவரையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை நீதிமன்றங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட நீதிமன்றங்களில் பிராந்திய மொழிப் பயன்பாடு இல்லாதது, சமானிய மக்களுக்கு பெரும் குறையாகவே கருதப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்புகளில் குறிப்பிடப்படும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் காணுவது மிகக் கடினமாகவும் இருந்தது. ஆகவே, அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப நீதிமன்றங்களின் தீர்ப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் வழக்காடு மொழியாகவும் மாநில மொழிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்தன.
அண்மையில் மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் நடத்திய விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் நிகழ்வுகளை ஆன்லைனில் கொண்டு வந்தது குறித்து பேசினார். அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்றும் அதற்கான பணிகள் குறித்து விளக்கினார்.
இவர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்து, அதில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்களை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடுவதின் தேவை மற்றும் பணிகள் குறித்து தலைமை நீதிபதி பேசினார். அதற்கான தொழில்நுட்பத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார். தலைமை நீதிபதியின் யோசனை பாராட்டத்தக்கது. இதன் மூலம் சாமானிய மக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் பயனடைவார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரீட்விட் செய்துள்ளார். அதில் "இந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்களை வெளியிடும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு கூட உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றினால் சாமானிய மக்களுக்கு நாட்டின் நீதியை மிக அருகில் கொண்டு வரும் முயற்சியாகும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நமது வழி தனி வழி".. தேனியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு..