புதுச்சேரி: ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் 60 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த தகவல் கட்டுப்பாடு பொது மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இடங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவந்தது.
இந்த மையம் அமைப்பதற்காக பழைய சிறை வளாகம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இறுதியாக ஏ.எப்.டி பஞ்சாலை நிறுவனத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை முதலமைச்சர் ரங்கசாமி, ஸ்மார்ட் திட்ட அலுவலர்கள் இன்று (ஆக.10)ஆய்வு செய்தனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
அனைத்து துறைகளுக்கும் பயன்
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் சுமார் 30க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் கட்டுப்பாடு பொது மையம் 60 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஏ.எப்.டி முதல் யூனிட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையம் அமைப்பதால் புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து குற்ற செயல்களும் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாலை விதிகளை மீறினால், செல்ஃபோன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால், தலைக்கவசம் அணியாமல் சென்றால் உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.
இதுபோன்று அனைத்து துறைகளுக்கும் ஏதுவான வசதிகள் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது ஸ்மார்ட் சிட்டி அலுவலர்கள், அரசு செயலர்கள் அருண், மாணிக்க தீபன், மாவட்ட உதவி ஆட்சியர் வல்லவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர்