புதுச்சேரி: புதுச்சேரி மாநில பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி கூறியதாவது, "புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.38 கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்களும், 7 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதினர்.
இதில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், 7 ஆயிரத்து 182 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 சதவீதம், காரைக்காலில் 83.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரியில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் சுல்தான்பேட்டையை சேர்ந்த அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுச்சேரி காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் 1, இயற்பியலில் 6, வேதியியலில் 80, உயிரியலில் 38, கணிப்பொறி அறிவியலில் 132, கணிதத்தில் 8, தாவரவியலில் 6, விலங்கியலில் 4, பொருளியலில் 37, வணிகவியலில் 157, கணக்கு பதிவியலில் 138, வணிக கணிதத்தில் 39, வரலாற்றில் 1, கணிப்பொறி பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்" என்றார்.
மேலும் அவர், "சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களான பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பிரதிமாதம் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், சித்த மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை தொடங்கி வைக்க ஜனாதி பதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் 6ந் தேதி புதுச்சேரிக்கு வர உள்ளார். 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கி வைக்கிறார். புதிய சட்டசபை கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிந்தபிறகு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்" என்றார்.
மேலும், தமிழக எம்பிக்களுக்கு புதுச்சேரியில் வேலை இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளாரே..? என்ற கேள்விக்கு, "தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம், இது தொடரும். புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்" என்று ரங்கசாமி பதில் அளித்தார்.
இதையும் படிங்க: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு.. ஜூன் 19 முதல் துணைத் தேர்வு!