டெல்லி : புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களைப் பரப்பி எதிர்க்கட்சிகள் விவசாயிகளைக் குழப்ப நினைக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தார். பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சி மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதில், "எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக பிரதமர் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதோ மோடி கருத்து தெரிவிக்க விரும்பும் அந்த மூன்று பொய்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், ஒரு குவிண்டால் நெல்லுக்கான விலை 900 ரூபாய் என்றும், ஆயினும் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் ஒரு குவிண்டால் ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் கூறுகின்றனர். இது பொய்யா?
கரோனா பரவலுக்கு காரணமானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தீங்குவிளைவிக்கும் நோக்குடன் வழக்கில் வேண்டுமென சிக்க வைக்கப்பட்டுள்ளனர் எனக்கூறி அவர்களை டெல்லி உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது இது பொய்யா?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில், உயிரிழந்த பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என அம்மாநில காவல் துறை கூறிய நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. இது பொய்யா? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உரையாற்றிய மோடி, வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்பி விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி குழப்ப நினைக்கின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம், இழந்த அரசியல் களத்தை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என எண்ணுகின்றன எனச் சாடியிருந்தார்.
இதையும் படிங்க: ‘3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்’ - ஸ்டாலின்