லக்கிம்பூர் வன்முறை - உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பஞ்சாப், சத்தீஸ்கர் அரசு நிவாரணம் - ராகுல் காந்தி
லக்னோ: லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு பஞ்சாப், சத்தீஸ்கர் அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் அக்டோபர் 2ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, லக்கிம்பூர் வன்முறை ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பஞ்சாப் மாநில அரசு மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசு சார்பி 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது ராகுல் காந்தியும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க உத்தரப் பிரதேசம் சென்றார்.