ராய்பூர்: சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பட்ஜெட் தாக்கல் செய்தார். 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் நடப்பாண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதில் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக முதலமைச்சர் பூபேஷ் அறிவித்தார். இந்த திட்டத்தின்கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், அங்கன்வாடி பணியாளர்கள், வீட்டு காவலர்கள், கிராம கோத்தவார்ஸ் உள்ளிட்டவர்களின் மாதாந்திர ஊக்கத் தொகையும் உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் அடிப்படையில், வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 2ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும்; இந்த தொகையைப் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 12ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 18 முதல் 35 வயதுடைய இளைஞர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்றும்; அவர்களது குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்குக் கீழாக இருக்க வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி முதல் சத்தீஸ்கர் சட்டப்பேரவை கூடிய நிலையில், நேற்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த கடைசி முழு நிலை பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெற்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் ஹிஜாப் கட்டாயம்! அரசின் உத்தரவால் மாணவிகள், பெண்கள் அதிருப்தி!