பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சு திரிபாதி (38), நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவரது காரை முகமூடி அணிந்து வந்த சிலர் சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த காங்கிரஸ் தலைவர் சஞ்சு திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சு திரிபாதி உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பிலாஸ்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் பருல் மாத்தூர் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து 7 தோட்டா உறைகளை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இதனிடையே இதுகுறித்து பேசிய பாஜக பிரமுகர் தரம்லால் கவுசிக், “மாநிலம் இனி அரசாங்கத்தால் ஆளப்படுவதில்லை. ஆனால் குண்டர்களால் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே பாதுகாப்பாக இல்லை என்றால், பொதுமக்களின் கதி என்னவாகும்? காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவர்கள் கொல்லப்படும் நிலையில், கவுரவ் திவாஸ் கொண்டாடி வருகின்றனர்" என விமர்சித்துள்ளார்.
மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலை நிலத்தகராறுடன் தொடர்புடையதாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில நாட்களுக்கு முன்பு, நிலத்தகராறு தொடர்பாக உயிரிழந்த சஞ்சு திரிபாதியின் சகோதரர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு மாதத்திற்கு விவசாயிகளுக்கு டோல் கேட் இலவசம் - பஞ்சாபில் நடப்பது என்ன?