தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வெப்பச்சலனம் காரணமாகப் பெய்யக்கூடிய மழை விவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, "கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழை பெய்யும்.
மேலும், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்" எனக் கூறப்படுகிறது.
ஜூன் 3: ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன் 4, 5: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 6: தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர் தர்மபுரி, கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), உதகமண்டலம் தலா 4 செ.மீ., வாணியம்பாடி (திருப்பத்தூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 3 செ.மீ., சூளகிரி (கிருஷ்ணகிரி) 2 செ.மீ., காஞ்சிபுரம், வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பாலக்கோடு (தர்மபுரி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 1 செ.மீ. அளவும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூன் 2, 3: குமரிக்கடல், இலங்கையின் தெற்குக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 2 முதல் 6ஆம் தேதிவரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.