சந்திராபூர்: முறத்தைக் கொண்டு, புலியை விரட்டிய பண்டைய தமிழச்சியின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அதற்கு நிகழ்கால சான்றாக ஒரு சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் நடைபெற்றுள்ளது. முறத்தைக் கொண்டு புலி விரட்டியது பழங்கதை, மரக் கட்டையால் புலியை விரட்டியது புது (தாயின்)கதை.
சந்திரபூரில் உள்ள ஜூனோனா கிராமம் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு அர்ச்சனா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காய்கறி பறிப்பதற்காக நாலா என்ற இடத்திற்கு தனது மகள் பிரஜக்தாவுடன் தாய் அர்ச்சனா சென்றுள்ளார்.
அப்போது குழந்தை அருகே விளையாடி கொண்டிருந்தது. தாய் காய்கறி பறிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த தாய், குழந்தை இருந்த பகுதியில் கவனத்தை செலுத்தியுள்ளார்.
அப்போது சிறுத்தை ஒன்று குழந்தையின் தலையை பிடித்தபடி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்.
பின்னர் சுதாரித்து கொண்டு அருகில் இருந்த கட்டையால் சிறுத்தையை தாக்கியுள்ளார். ஆனால் சிறுத்தை அவரையும் தாக்க தொடங்கியது. எனினும் மன உறுதியுடன் கட்டையால் சிறுத்தையை கடுமையாக தாக்கினார். ஒருகட்டத்தில் சிறுத்தை பின்வாங்கி வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. மரண பிடியிலிருந்து தனது மகளை போராடி மீட்டார்.
தகவறிந்து ஜூனோனா கிராமத்திற்கு சென்ற வன மேம்பாட்டுக் கழகத்தினர் (FDCM) காயமடைந்த பிரஜக்தாவை சந்திராபூர் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறுத்தையை அடித்து விரட்டிய தாய்க்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் தீவிர தூய்மைப்பணி