சண்டிகர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று(டிச.27) வெளியாகின. மொத்தமுள்ள 35 வார்டுகளுக்கான முடிவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
35 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது. 12 இடங்களுடன் பாஜக இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் எட்டு இடங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அகாலி தளம் ஒரு இடத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றி வரப்போகும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான ஆம் ஆத்மி கட்சி தலைநகர் டெல்லியில் முதலில் ஆட்சியை பிடித்தது. அதன் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை வலுவான மாற்றாக முன்னிறுத்த தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வலுவான மாற்று சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுத்துவருகிறது. 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Niti Ayog Health Index: இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு