டெல்லி: மலம் அள்ளும் பணியால் ஒருவர் கூட இறக்கவில்லை என ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கையால் மலம் அள்ளும் தொழிலாளிகளுக்கான புனர்வாழ்வு சட்டத்தின் கீழ் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் துப்புரவு தொழிலாளர்கள் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, 66,692 துப்புரவு தொழிலாளிகள் இருப்பதாகவும், மலக்குழி மரணங்கள் ஒன்று கூட நிகழவில்லை எனவும் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமைச்சரின் பதில் அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்ட 340 பேர் இறந்துபோனதை அந்த அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார். மலம் அள்ளும் தொழிலாளிகளின் சாவு கூட கண்ணியமானதாக இருக்க முடியவில்லை. அரசாங்கம் இப்படி இருப்பது சரியல்ல.
அந்த மக்களை நாம் கொன்றோம் என்றால், நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டு அதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவர்கள் இறப்பை மறைப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதற்கு சமம் என சஃபாய் ஊழியர்கள் இயக்கத்தின் (Safai Karmachari Andolan) தலைவர் பெஜவாடா வில்சன் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: மலம் அள்ளுபவன் கைகளில் எந்தக் கை பீச்சாங்கை?