டெல்லி: இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய அரசின் சார்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே அமர்வில் முறையிட்டுள்ளார். அதில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே இந்திய கடல் எல்லைக்குள்பட்ட அரபிக்கடல் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரடி என்பவருக்குச் சொந்தமான செயின்ட் ஆண்டனி விசைப்படகில் 11 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, `என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர், மீன்பிடிப் படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில், கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையைச் சேர்ந்த அஜீஸ்பிங்க், கேரளாவில் வசித்துவந்த குமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜெலஸ்டின் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 9 மீனவர்கள் காயமுற்றனர். இது குறித்து கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல் நிலையத்தில் இத்தாலி மாலுமிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க இந்திய அரசுக்கு உரிமையில்லை என்று இத்தாலி தரப்பு வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த எர்ணாக்குளம் மாவட்ட நீதிமன்றம், இத்தாலி மாலுமிகள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. பின்னர் இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றது.
அப்போது இந்திய மீனவர்களை இந்திய எல்லைக்குள் புகுந்து இத்தாலி மாலுமிகள் சுட்டது தவறு என்று தீர்ப்பளித்தது. எனினும் இத்தாலி மாலுமிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை விதிக்க மறுத்துவிட்டது. அதன்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அதுவும் ஓராண்டுக்குள் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், இத்தாலி அரசிடம் பேசி உரிய இழப்பீட்டை பெற்று தர உதவுவோம் என்று கூறியது.
இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முறையீட்டில், “பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை பெற்றுக்கொடுத்துள்ளோம். அதேபோல் இத்தாலி அரசும் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு மாலுமிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியாக கூறியுள்ளது. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இத்தாலி மாலுமிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடற்கொள்ளையர்கள் என்று தவறுதலாக எண்ணி சுட்டுவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : இத்தாலி கப்பல் படை வீரர் துப்பாக்கி சூடு விவகாரம்: தமிழ்நாடு மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு