டெல்லி: நாட்டில் கரோனா தாக்கம் சீராகும் வரை ரெம்டெசிவர் மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ரெம்டெசிவர் முக்கிய பங்காற்றியது. முக்கிய வைரஸ் எதிர்ப்பு மருந்தாக ரெம்டெசிவர் இருந்து வருகிறது. எனவே நாட்டில் கரோனா தாக்கம் அதிகரித்துவருவதைக் கருத்திற்கொண்டு இந்திய அரசு இம்மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கிறது.
மேலும், இம்மருந்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் கிடைக்கும்படியான வழிமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி,
- மருந்து நிறுவனங்கள், ரெம்டெசிவர் இருப்பின் அளவை தங்களது இணையதளங்களில் பதிவிடவேண்டும்
- மருந்து முகவர்களின் முழு விவரங்களையும், அதன் தயாரிப்பு நிறுவனங்கள் இணையதளங்களில் காட்சிப்படுத்த வேண்டும்
- இதனைக் கொண்டு அந்தந்த மாநில சுகாதார அலுவலர்கள் முகவர்களிடம் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
மேலும், அமெரிக்காவின் க்ளைட் சைய்ன்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெற்று இந்தியாவில் மொத்தம் 7 மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவர் மருந்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.