டெல்லி : பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு Z-plus பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அவருக்கு மிரட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு துப்பாக்கி ஏந்திய 55 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பொறுப்பை கையில் எடுப்பார்கள் என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த Z-plus பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் போலீசார் வழங்கி வரும் பாதுகாப்பை தவிர்த்து, பஞ்சாப் முதலமைச்சரின் வீடு, அலுவலகம், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பகவந்த் மானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காலிஸ்தான் விவகாரத்தில் பக்வந்த் மான் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் தொழில்முனைவோரும் மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவரும், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் தலைவருமான முகமது அல்தாப் புகாரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக Z-plus பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மாவோயிஸ்டு மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்தும் அண்ணாமலைக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் பாதுகாப்பு என்னென்ன : இந்தியாவில் X, Y, Y PLUS, Z, Z PLUS மற்றும் SPG என ஆறு வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. SPG என்பது சிறப்பு பாதுகாப்பு குழுவாகும், இவர்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர், அவர்களது குடும்ப உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவர்.
X பிரிவை பொறுத்தவரை இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் ஆறு பாதுகாப்பு சேவை அதிகாரிகள் 8 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். Y பிரிவை பொறுத்தவரை இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆயுதம் ஏந்திய ஒரு அதிகாரியும் பாதுகாப்பு வழங்குவார்கள்.
Y PLUS பாதுகாப்பை எடுத்துக் கொண்டால், ஐந்து பணியாளர்கள், ஒரு சிஆர்பிஎப் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் என பாதுகாப்பு தேவைப்படுபவரின் வீடு முன் நிறுத்தப்படுவார்கள். ஆறு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவார்கள்.
Z பிரிவில் 22 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதில் 2 முதல் 8 பேர் ஆயுதம் ஏந்திய காவலர்கள். 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இது தவிர 1 முதல் 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள் விஐபியின் பயணத்தின் போது உடன் செல்வார்கள். Z PLUS பிரிவில் 22 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருப்பர். அது தவிர குண்டு துளைக்காத கார், 3 ஷிப்ட்களில் பாதுகாப்பு ஆகியவவை வழங்கப்படும்.
இதையும் படிங்க : Meta Layoff : இந்தியர்கள் உள்பட 10 ஆயிரம் பேர் பணி நீக்கம்... மெட்டா அதிரடி முடிவு!