ஹைதராபாத்: தெலங்கானாவில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.01) தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவங்கி வைப்பது, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெலங்கானாவில் விரைவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
-
Union Minister, Telangana BJP president Shri @kishanreddybjp ji on Government of India notifying establishment of National Turmeric Board.#ThankYouModiJi #TurmericBoard pic.twitter.com/BJX09DFMqL
— Arvind Dharmapuri (@Arvindharmapuri) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Union Minister, Telangana BJP president Shri @kishanreddybjp ji on Government of India notifying establishment of National Turmeric Board.#ThankYouModiJi #TurmericBoard pic.twitter.com/BJX09DFMqL
— Arvind Dharmapuri (@Arvindharmapuri) October 4, 2023Union Minister, Telangana BJP president Shri @kishanreddybjp ji on Government of India notifying establishment of National Turmeric Board.#ThankYouModiJi #TurmericBoard pic.twitter.com/BJX09DFMqL
— Arvind Dharmapuri (@Arvindharmapuri) October 4, 2023
தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்பது அம்மாநில விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாகும். கடந்த 2019-ஆம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தங்கள் அஸ்திரமாக கையில் எடுத்து இருந்தன. நிஜாமாபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ‘அரவிந்த் தர்மபுரி’ மஞ்சள் வாரியம் அமைக்கப்படாவிட்டால் பதவி விலகுவேன் என வாக்குறுதி அளித்து, தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
பின்னர் நெடுங்காலமாக மஞ்சள் வாரியம் குறித்த அறிவிப்பு வெளிவராத காரணத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தன. இந்நிலையில், தெலங்கானா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி மீண்டும் மஞ்சள் வாரியம் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரதமரே நேரில் வந்து விரைவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என தெரிவித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று (அக்.04) தெலங்கானா மாநிலத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மஞ்சளைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது, உலகளாவிய சந்தையை உருவாக்குவது, புதிய தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத் தேசிய மஞ்சள் வாரியம் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வாரியத்தின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார் எனவும், வாரியத்தின் குழுவில் ஆயுஷ் அமைச்சகத்தின் உறுப்பினர், பார்மாசூட்டிக்கல்ஸ், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை, மூன்று மாநிலங்களில் இருந்து மூத்த பிரதிநிதிகள் (சுழற்சி முறையில்), ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தேசிய அல்லது மாநில நிறுவனங்கள், மஞ்சள் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள், வணிகத் துறையால் நியமிக்கப்படும் செயலாளர் ஆகியோர் இடம்பெறுவர் என அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், உலகிலேயே மஞ்சளின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும், ஏற்றுமதியாளராகவும் இந்தியா விளங்குகின்றது. 2022 - 2023ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு 11.61 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75 சதவீதம் ஆகும். இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களாக மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளன.
மஞ்சளில் உலக வர்த்தகத்தில் இந்தியா 62 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. 2022 - 2023ஆம் ஆண்டில், 380-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களால் 207.45 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தேசிய மஞ்சள் வாரியத்தின் கவனம், செயல்பாடுகளால் 2030ஆம் ஆண்டிற்குள் மஞ்சள் ஏற்றுமதி 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யும் மாநிலமாக தெலங்கானா உள்ளது. தெலங்கானாவில் 2022 - 2023ஆம் ஆண்டு 1 லட்சத்து 53 ஆயிரத்து 912 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு 3.40 லட்சம் டன் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், 20,250 டன் மட்டுமே நுகரப்பட்டு, மீதமுள்ளவை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. தெலங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஆர்மர் பகுதியில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உலகளவில் அதிகளவில் தேவைப்படும் ‘குர்குமின்’ கொண்ட மஞ்சள் இங்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தெலங்கானா விவசாயிகளின் நீண்ட நாள் கனவான தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தெலங்கானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தல், வரவிருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையாகத் தான் பாஜக அரசு தேசிய மஞ்சள் வாரியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை..! உஜ்வாலா பயனாளிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு!