முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அவர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, சுபன்சிரி பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினரிடமும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினரிடமும் அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி ரோந்து பணியில் ஈடுபட்டதற்கு ராணுவ வீரர்களை அவர் பாராட்டினார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், "எந்தவித சவால்களையும் எதிர்கொள்ள ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பது பாராட்டுக்குரியது என பிபின் ராவத் தெரிவித்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாலையே, அவர் டெல்லிக்கு செல்லவுள்ளார். இன்று காலை, அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு செக்டாரில் உள்ள விமான தளவாடங்களுக்கு சென்ற ராவத், இந்திய படையிடம் யார் மோதினாலும் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என தெரிவித்தார்.