டெல்லி: காலிஸ்தான் ஆதரவாளரும், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங், டெல்லி தெருக்களில் மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிய அம்ரித் பால் சிங் தனது கூட்டாளியுடன் டெல்லி தெருக்களில் ஹாயாக சுற்றித் திரிவது சிசிடிவி காட்சி வாயிலாகத் தெரியவந்துள்ளது .டெல்லி நகரின் தப்ரி என்னும் பகுதியில் உள்ள சாய் சவுக்கில் என்னும் இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அம்ரித் பால் சிங் வீதியில் உலா வரும் இந்த சிசிடிவி காட்சிகள் மார்ச் 21 தேதி பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஆகும்.
தற்போது வெளியாகியுள்ள அந்த சிசிடிவி காட்சிகளில், அம்ரித் பால் சிங் மாஸ்க் அணிந்து கொண்டு சாலையில் சாதாரண பொதுமக்களைப் போல் சென்று கொண்டிருக்கிறார். டர்பன் அணியாமல் நீளமான முடியுடன் அவர் காணப்படுகிறார். அவர் ஸ்டைலாக டெனிம் ஜாக்கெட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது அம்ரித் பால் சிங் தானா என்று உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
அம்ரித்பால் சிங் இதற்கு முன்னதாக மார்ச் 18 மற்றும் 20 க்கு இடையில் பஞ்சாபின் பாட்டியாலா மற்றும் லூதியானாவில் காணப்பட்டார். மார்ச் 18 ஆம் தேதி சிசிடிவி காட்சிகளில் அம்ரித்பால் லூதியானாவில் உள்ள ஒரு சாலையில் அவரது கூட்டாளி பாபால்பிரீத்துடன் இருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவில் அம்ரித்பால் சிங் ஒரு இளஞ்சிவப்பு நிற டர்பன் அணிந்திருந்தார். அங்கிருந்து அம்ரித் பால் சிங் ஃபில்லூரில் ஒரு ஸ்கூட்டரில் லிப்ட் எடுத்து லடோவல் சென்றுள்ளார்.
பின்னர் அம்ரித்பால் சிங் லடோவாலில் இருந்து ஜலந்தர் பைபாஸ் வரை ஆட்டோ ரிக்சாவில் சென்று, பின்னர் அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் ஷெர்பூர் சவுக்கை அடைந்துள்ளார். இந்த பயணம் முழுவதும் அந்த பகுதிகளில் இருந்த பல்வேறு சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்துள்ளது.
அம்ரித்பால் சிங் வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்று விடக் கூடாது என்பதற்காக காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் மூன்றாவது நாட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்ற 6 பழங்குடியினத் தலைவர்களுக்கு வீட்டுச்சிறை!