டெல்லி: 2022- 23ஆம் ஆண்டுக்கான 10 மற்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ(CBSE) பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 21ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணிக்குத் தேர்வு தொடங்கி நண்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென கூறப்படுகிறது. மேலும் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கவும், செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் சி.பி.எஸ்.இ. இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ளாதபட்சத்தில், ஆப்சென்ட் என குறிப்பிடுமாறும், அதே நேரம் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக மாணவர் தேர்வில் கலந்து கொள்ளத் தவறினால் சி.பி.எஸ்.இ இயக்குநரகம் அறிவிக்கும் தேதியில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Viral Video - விமானத்தில் வீதிச் சண்டை - என்னவாம்?