சீன விசா மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக சிபிஐ முன் முதல்முறையாக நேற்று (மே 26) ஆஜரானார். தொடர்ந்து, அவர் சிபிஐ முன் இன்றும் (மே 27) ஆஜராகியுள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்ததில், "கடந்த சில ஆண்டுகளாக, விசாரணை அமைப்புகள் தற்போதைய அரசுடன் இணைந்து கொண்டு தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் குறிவைத்து, அடுத்தடுத்து பொய் வழக்குகள் மூலமாக எங்களின் குரலை மவுனமாக்க முயற்சி செய்து வருகின்றன.
சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து உங்களுக்கு தெரியப்படுத்தவே இக்கடித்தத்தை எழுதுகிறேன். எனக்கு துளியும் தொடர்பில்லாத வழக்கு ஒன்றை தொடர்ந்து, சிறுபிள்ளை போன்ற அரசும், சிபிஐயும் என்னுடைய வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில், மிகவும் ரகசியமான ஆவணங்கள், சில சொந்த குறிப்புகள், நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான சில ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சிபிஐ எடுத்து சென்றுள்ளளது. அதில், தான் உறுப்பினராக உள்ள தகவல் தொழில்நுட்ப, நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி அளிக்க உள்ள சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ சோதனையின்போது எடுத்துச்சென்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரான தன்னுடைய நடவடிக்கையில் சிபிஐ குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடி தாக்குதல். எனவே, நாடாளுமன்ற சிறப்புரிமையை அப்பட்டமாக மீறும் இந்த பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் "விசாரணைக்கு அழைப்பது அவர்களின் உரிமை (சிபிஐ), செல்வது எனது கடமை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 17 கேள்விகளுடன் மோடியை வரவேற்ற டிஆர்எஸ் கட்சி