புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் புதிய கலால் கொள்கை 2021 - 2022 குறித்து விசாரணை நடத்துமாறு, மத்திய புலனாய்வு பிரிவுக்கு (சிபிஐ) டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா இன்று பரிந்துரை செய்துள்ளார். இதில், டெல்லி மாநில துணை முதலமைச்சரும், கலால்துறையின் அமைச்சருமான மனீஷ் சிசோடியாவை, வினய் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மனீஷ் சிசோடியாவை அவர்கள் கைதுசெய்வார்கள் என்று நான் கூறிக்கொண்டே இருக்கிறேன். நாட்டில் தற்போது ஒரு புதிய அமைப்பு உள்ளது. அதில், யாரெல்லாம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
பிறகு அந்த நபர் மீது ஒரு போலியான வழக்கு உருவாக்கப்படுகிறது. அதுபோலத்தான் இந்த வழக்கும் போலியானது. இதில் உண்மை இல்லை. எங்கள் மீது பல வழக்குகளை போட்டிருக்கின்றனர். இருப்பினும், சிறைகளுக்கு நாங்கள் அஞ்சவில்லை. ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் தான் பாஜக கட்சியினர்.
ஆனால் நாங்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைய மறுத்து உயிரைத் தியாகம் செய்த வீரர் பகத் சிங்கை பின்பற்றுபவர்கள் என்பதையும் சொல்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கான நேரம் வந்துவிட்டது. பஞ்சாப்பில் வெற்றி பெற்றதிலிருந்து, ஆம் ஆத்மி தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
நாங்கள் தேசிய அளவில் உயர்ந்து வருவதை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இது எதுவும் எங்களைத் தடுக்காது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சீக்கியர் தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டிய கொடுமை