சென்னை : காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முன்னதாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் வினாடிக்கு 3,128 கன அடியும், அதே போன்று, ஜனவரி முழுவதும் வினாடிக்கு 1,030 கன அடி நீரும் தமிழ்நாட்டுக்கு திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்து இருந்தது. மேலும் ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து விநாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!