ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைக் காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில், தாஜ்மஹாலில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கேஷ்லெஸ் டிக்கெட் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக, க்யூஆர் குறியீடுகளை (QR code) ஸ்கேன் செய்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இனி டிக்கெட்டை பெற பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை என்றும், அவர்களது நேரம் மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாஜ்மஹாலில் இணைய வசதி மேம்படுத்தப்பட்டு வருவதாக ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர் சச்சித் கவுர் தெரிவித்தார். தாஜ்மஹாலில் விஐபி நுழைவுகள் ஏதும் இல்லை என்றும், விஐபி நுழைவு என்ற பெயரில் பலர் மோசடி செய்துவருவதால் பார்வையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சுற்றுலாப்பயணிகளுக்கு ஏதேனும் புகார் இருந்தால் 9412330055 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:"லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணியத் தடை" - பஞ்சாப் அரசு