புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் நிவர் புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்தது. இதனால் காரைக்கால், கிளிஞ்சல்மேடு, கோட்டிச்சேரி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நவம்பர் 26ஆம் தேதி மீன்வளத் துறையின் தடை உத்தரவை மீறி காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, காளிகுப்பம், டிஆர் பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து 54 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதையறிந்த காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் கவியரசன், தடையை மீறி கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நிரவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.