ஹர்தோய்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கோச்சிங் கிளாஸ் செல்வதற்காக, கோத்வலி பகுதியில் சைக்கிளில் சென்று உள்ளார். அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக மாணவனின் சைக்கிள் மீது மோதியது. அப்போது தடுமாறிய மாணவர் கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் மாணவனின் கால், காரின் பின்புறத்தில் சிக்கிக் கொண்டது. இதை கவனிக்காத கார் ஓட்டுநர், மாணவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மாணவனின் கூச்சல் ஓட்டுநர் காதுகளுக்கு எட்டாத நிலையில், ஏறத்தாழ 1 கிலோ மீட்டர் தூரம் மாணவனை இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதைக் கண்ட சக வாகனவோட்டிகள் விரட்டிச் சென்று காரை நிறுத்தி மாணவனை மீட்டனர். படுகாயங்களுடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைடையே காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
காரை சாலையில் கவிழ்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே களேபரமாக காட்சி அளித்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கார் ஓட்டுநரை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மைனர் பெண்ணை 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நபர் - தற்போது போக்சோவில் கைது