டெல்லி : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லி சென்று அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்திப்பார் என்று ஊகங்கள் எழும்புகின்றன.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகு அமரீந்தர் சிங், தலைநகருக்குச் செல்வது இதுவே முதல் முறை. ஒன்றிய அமைச்சரவையில் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு இன்று (செப்.29) நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகு பாஜக உயர்மட்ட தலைவர்கள் இடமளிப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் அமரீந்தர் சிங், “தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்ல இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்யவுள்ளோம்” என்றும் தெரிவித்தார். எனினும் தன் மீதான ஊகங்களை மறுத்தார்.
பஞ்சாப் அரசியலில் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் இடையேயான உள்கட்சி பிரச்சினை நாடறிந்ததே.
இதற்கிடையில் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சில வாரங்களில் சித்துவும் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.. 5 காரணங்கள்!