மும்பை: ஆண்டுதோறும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 75ஆவது ஆண்டு விழாவில் இந்தியா கவுரவ நாடாக பங்கேற்கிறது. இதனையடுத்து இந்த திரைப்பட விழாவில் சத்யஜித் ரே இயற்றி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த பெங்காலி மொழித் திரைப்படமான ‘பிரதித்வந்தி’ திரையிடப்பட உள்ளது. சுனில் கங்கோபதாயி எழுதிய 'பிரதித்வந்தி' நாவலைத் தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் சித்தார்த்தா எனும் கதை நாயகன் படித்த நடுத்தர இளைஞனாக இருப்பார். அந்த இளைஞன் சமூகத்தில் இருக்கும் அமைதியின்மையில் சிக்கியும், தனக்கான வேலை தேடியும் எவ்வாறு அல்லல் படுகிறான் என்பதே படத்தின் கதையாகும். இந்த திரைப்படம் அதன் தொழில்நுட்பத்திற்காக பிரபலமடைந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலாக photo-negative ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற்றன.
மேலும் இந்தப் படமானது 1971ஆம் ஆண்டு நடந்த சிகாகோ சர்வதேச திரைப்படவிழாவில் 'கோல்ட் ஹுகோ' விருதுக்காக பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இந்தியாவின் 1971ஆம் ஆண்டு தேசிய விருதுகள் விழாவில் 3 தேசிய விருதுகளை 'பிரதித்வந்தி' பெற்று இருந்தது. சிறந்த இயக்குநருக்கான விருதை சத்யஜித் ரே பெற்றார். மேலும் இது குறித்து இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து சத்யஜித் ரே பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு 4K தெளிவுத்திறனில் அவரது படங்களை டிஜிட்டல் முறையில் மீட்டமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த நோக்கத்திற்காக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் 'பிரதித்வந்தி'யும் ஒன்றாகும்.
கேன்ஸ் திரைப்படவிழாவின் 75ஆவது ஆண்டு விழா மே 17 முதல் 28 வரை பிரான்ஸ்ஸில் நடைபெற உள்ளது. இதில் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த விழாவில் நடிகர் மாதவன் இயக்கி நடித்திருக்கும் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.
இதையும் படிங்க:'நடிப்பது சலிப்பான விஷயம் என்று நினைத்தேன்' – மனம் திறந்த செல்வராகவன்