டெல்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. இந்தத் தொற்றால் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் இந்த மாநிலங்கள் கரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான ரெம்டெசிவிர் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
இந்த நிலைமையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. இதனை கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இது ஒருபுறமிருக்க சில அரசியல் கட்சிகள் மக்களுக்கு எவ்வித மருத்துவப் பரிந்துரையுமின்றி ரெம்டெசிவிர் மருந்துகளை அளித்துவருகிறது. இதையடுத்து அரசியல் கட்சியினரால் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கவோ அவற்றை மொத்தமாக வாங்கவோ அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் டெல்லி மருத்துவ கவுன்சிலின் தலைவர் அருண் குப்தா. அவர் கூறுகையில், "ரெம்டெசிவிர் ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்து. இது கரோனா வைரஸைக் கொல்லும் எனக் கூறப்பட்டாலும் அவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ரெம்டெசிவிர் என்பது அவசரகாலப் பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு மருந்து. இந்த மருந்தினை சாதாரணமாக மருந்தகங்களில் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துகளை மொத்தமாக வாங்குவதும் அதனைப் பதுக்கிவைப்பதும் மிகவும் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது. அரசியல் கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், மக்களும் ரெம்டெசிவிர் மருந்தினைப் பயன்படுத்த மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.
குஜராத் பாஜக தலைவரான சி.ஆர். பாட்டீல், சூரத் மக்களுக்கு ரெம்டெசிவிர் வைரஸ் எதிர்ப்பு மருந்தை இலவசமாக விநியோகித்தது சர்ச்சையைத் தொடங்கிவைத்தது. சைடஸ் நிறவனத்திடமிருந்து 5,000 ரெம்டெசிவிர் ஊசி வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், சூரத் மக்களுக்கு நாளொன்று அந்நிறுவனத்திடமிருந்து தினமும் 500 முதல் 1,000 ஊசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.
இருப்பினும், விதிகளின்படி, தனிநபர்களுக்கு வைரஸ் தடுப்பு மருந்துப்பொருளை வாங்கும் அதிகாரம் இல்லை. அரசியல் கட்சிகள் ரெம்டெசிவிரை வாங்கவோ அல்லது சேமிக்கவோ முடியாது. மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்க மட்டுமே மாநில அரசுகளுக்கு அனுமதி உண்டு என்றார்.
சில நாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூர் நகரத்திற்கு 10,000 ரெம்டெசிவிர் குப்பிகளைச் சன் பார்மாவிலிருந்து வாங்கினார்.
மேலும், தடுப்பு மருந்துகளைப் பதுக்கிவைத்திருப்பது தொடர்பாக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் காவல் துறையினருடன் பரபரப்பான உரையாடலில் ஈடுபட்ட காணொலி பரபரப்பானது. பாரக் பார்மாவின் இயக்குநராக உள்ள ராஜேஷ் டொமேனியா மீதும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான அசோக் சவான், மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் கள்ளச் சந்தையில் வைரஸ் தடுப்பு மருந்துகளை விற்பவர்கள் மீதும் கரோனா மருந்துகளைப் பதுக்கிவைத்திருப்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.