லக்னோ: தீபக். இவர் அரசு பொதுமருத்துவமனையில் இதயவியல் நோய் நிபுணராக பணிபுரிகிறார். இவரின் தந்தை கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதி காலமானார். இவரின் தந்தையின் மரணத்துக்கு மருத்துவமனையில் நிலவிய நிர்வாக சீர்கேடும், ஊழியர்களின் கவனக்குறைவும் காரணம் என்று வருந்துகிறார்.
அவர் மேலும், “நான் ஒரு மருத்துவர், பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். என் குடும்பத்தில் நான்கு பேர் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதில் 74 வயதான என் தந்தையும் ஒருவர். அவர் ஒரு ஓய்வுப் பெற்ற ரயில்வே அலுவர். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் இதய பிரச்சினைகள் இருந்தன. இதற்கிடையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து லக்னோ மருத்துவமனையில் என் தந்தையை அனுமதிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்தேன். ஆனால் அவர்கள் போலியான உத்திரவாதங்கள் அளித்தனர். மாறாக, என் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் என் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தேன்.
அப்போது அவர் மூச்சு விட சிரமப்பட்டார். பின்னர் அவருக்கு நான் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்தேன். எனினும் அவர் தொடர்ந்து சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து லோக்பந்து மருத்துவமனையில் அனுமதிக்க அணுகினேன். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அனுமதி கிடைத்தது. ஆனாலும் அத்தனையும் வீணாகிவிட்டது. மருத்துவர்கள் சரியான முறையில் என் தந்தைக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்துள்ளார்.
என் தந்தையின் இறப்புக்கு மருத்தவமனை நிர்வாகத்தின் அலட்சியமும், மருத்துவ ஊழியர்களின் கவனக் குறைவுமே காரணம்” என்றார். தீபக்கின் உறவினர்கள் பல கட்ட முயற்சிகள் எடுத்துள்ளனர். எனினும் அவர்களுக்கு உரிய ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.