கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்கும், ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை (பிப்ரவரி 12) முதல் காலவரையறையின்றி ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.
இதற்கு அரசியலமைப்புச் சட்டம் 174ஆவது பிரிவைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கறிஞர் ராம் பிரசாத் சர்கார் என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "ஆளுநர் ஜெகதீப் தன்கர் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான செயல்களை செய்துவருகிறார். நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு சாதகமாகவும் செயல்படுகிறார். எனவே அவரை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று(பிப்.18) விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், இந்த மனு எவ்வித ஆதாரங்களுமின்றி, விளம்பர நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதாரமற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தடுக்க மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆளுநரை திரும்பபெறக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: 'உண்மை என்னவென்று தெரியாமல் இப்படிப் பேசிட்டீங்களே ஸ்டாலின்!'