விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (நவ.25) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளும் விளையாட்டுத்துறையில் தங்களுக்கிடையே ஒத்துழைப்பு வழங்கினால் விளையாட்டுத்துறை சார்ந்த அறிவியில், மருத்துவம், பயிற்றுவிக்கும் நுட்பங்கள் ஆகியவை குறித்த அறிவு மேம்படும். இதன் விளைவாக, சர்வதேசப் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதுமட்டுமின்றி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள உறவும் வலுப்படும்.
சாதி, மதம், இனம், பாலினம், பிராந்தியம் ஆகியவற்றைக் கடந்து ஒத்துழைப்பு வழங்குவதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அதற்கு சமமான பலன்களானது, விளையாட்டுத்துறையில் இந்த ஐந்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். உலகின் மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் இந்த நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகின் ஜிடிபியில் 23 விழுக்காட்டினை இந்த ஐந்து நாடுகளும் கொண்டுள்ளன. நிலப்பரப்பில் 30 விழுக்காட்டினையும் வர்த்தகத்தில் 18 விழுக்காட்டினையும் இந்த ஐந்து நாடுகளும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.