ஹைதராபாத்: ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்ரி, திரிபுரா மாநிலத்தில் உள்ள போக்ஸாநகர் மற்றும் தன்பூர், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள கோசி, கேரளா மாநிலத்திலுள்ள புதுப்பள்ளி மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்திலுள்ள துப்குரி ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செப்.5) தொடங்கியது.
பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக I.N.D.I.A கூட்டணிகள் மோதும் முதல் தேர்தல் என்பதாலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒத்திகை போன்றது என்பதாலும் அதீத கவனத்தை பெற்று உள்ளது. ஒட்டுமொத்தமாக 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
2022 உத்தரபிரதேசம் மாநிலம் கோசி சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த தாரா சிங் சவுகான் வெற்றி பெற்று பின் ராஜினாமா செய்ததால் தற்போது கோசி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை பா.ஜ.க சார்பில் தாரா சிங் சவுகான் சமாஜ்வாடி கூட்டணியில் உள்ள சுதாகர் சிங்கையை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்த இடைத்தேர்தல் பா.ஜ.க கூட்டணி மற்றம் I.N.D.I.A கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போட்டியாக பார்க்கப்படுகிறது. கோசி தொகுதியில் மெத்தம் 4.30 லட்சம் வாக்காளர்களில், 90,000 முஸ்லிம்கள், 60,000 தலித்துகள், 45,000 பூமிஹார், 16,000 ராஜபுத்திரர்கள் மற்றும் 6,000 பிராமணர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. பாகேஷ்வர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் உயிரிழந்ததால் தற்போது இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் 2007 முதல் தொடர்ந்து நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் சந்தன் ராம் தாஸ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பாரத் குடியரசுத் தலைவர் - மாநிலங்களின் ஒன்றியத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்" - காங்கிரஸ் கண்டனம்!
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரகாண்ட் பாகேஷ்வர் தொகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகேஷ்வர் தொகுதி இடைத்தேர்தலில் சந்தன் ராம் தாஸ் மனைவி பார்வதியை வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸின் பசந்த் குமார், சமாஜ்வாடி கட்சியின் பகவதி பிரசாத், உத்தரகாண்ட் கிராந்தி தளத்தின் அர்ஜுன் தேவ் மற்றும் உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் பகவத் கோஹ்லி ஆகிய 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்ரி சட்டமன்றத் தொகுதியில் 373 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இன்ற காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்க 200 வாக்குச் சாவடிகள் மாவோயிஸ்டுகளால் நடமாட்டம் இருக்கும் வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தும்ரி சட்டமன்ற இடைத்தேர்தலில் 1.44 லட்சம் பெண்கள் உட்பட 2.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஜார்க்கண்ட தும்ரி தொகுதி ஜகர்நாத் மஹ்தோ எம்.எல்.ஏ மரணம் காரணமாக இத்தொகுதியில் இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு I.N.D.I.A கூட்டணி வேட்பாளராக ஜகர்நாத் மஹ்தோ மனைவி பெபி தேவியை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர். அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் சார்பாக யசோதா தேவியை நிறுத்தியுள்ளனர் இவருக்கு பா.ஜ.க கூட்டணி ஆதரவளித்துள்ளனர்.
இதே போல் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், திரிபுரா மாநிலத்திலுள்ள போக்ஸாநகர் மற்றும் தன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மேற்கு வங்கம் மாநிலத்திலுள்ள துப்குரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
இந்த 6 மாநிலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதன் மூலம் I.N.D.I.A கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் களமாக இது கருதப்படுகிறது. மேலும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Teachers Day : ஆசிரியர் தினம்! அணையா விளக்காய் ஒளிவீசும் ஆசிரியர்கள்!