கம்மா ரெட்டி (ஹைதராபாத்): தொழிலதிபர் ஒருவர், தான் ஈட்டிய வருமானத்தின் பெரும்பகுதியை அரசுப் பள்ளி கட்டுவதற்காகக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களில் பலர், வெளிநாடுகளில் வேலைபார்த்து அதன் சுகத்தை அனுபவித்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் நிலையை நாம் காண முடியும். சிலரோ இங்கு வந்து தாங்கள் ஈட்டிய வருவாய் அனைத்தையும், தலைநகரங்களில் முதலீடு செய்து சொத்துகளாக தற்காத்து வைத்து கொள்வர்.
வெகு சிலரே, தங்களின் கிராமங்களுக்கு திரும்பி பாரம்பரிய விவசாயம், தொழில் என்று ஊரைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதேபோல, தன் கிராமத்தை அளவற்று நேசிக்கும் மனிதர் தான் சுபாஷ் ரெட்டி. பல ஆண்டுகள் வெளிநாட்டில் பணம் ஈட்டிய இவருக்கு, அது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊர் திரும்பிய சுபாஷ் ரெட்டி
சுமார் 10 வருடங்களுக்கு முன் தெலங்கானா மாநிலம், கம்மா ரெட்டி மாவட்டத்திலுள்ள ஜனகம்மா கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார். முதலீடுகள் மூலம் சொந்த கிராமத்தில் தொழில் தொடங்கிய அவர் நல்ல வருமானத்தை ஈட்டினார்.
அதனைக் கொண்டு கிராமத்திற்கு அவ்வப்போது தெரு விளக்குகளை சீரமைப்பது, கோயில்களைப் பராமரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது போன்றவைகளை செய்து வந்தார். இச்சூழலில் தான், தான் பயின்ற அரசுப் பள்ளிக்கு ஒரு முறை போக நேர்ந்துள்ளது.
படித்த பள்ளிக்கு கட்டடம்
அங்கு சென்ற அவர், பள்ளியின் நிலையைக் கண்டு வேதனை அடைந்தார். உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களை சந்தித்துப் பேசிய சுபாஷ் ரெட்டி, புதிதாக பள்ளி கட்டடத்தை கட்டுவதற்காக ரூ.6.5 கோடி நிதியளித்தார்.
மொத்தம் 40ஆயிரத்து 500 சதுர அடி அளவிற்கு கட்டடங்கள் எழுப்பப்பட்டன. அனைத்து விதமான உள்கட்டமைப்புகளுடன், கழிப்பறை வசதி, டிஜிட்டல் வகுப்புகள், விளையாட்டு மைதானம், மாணவர்களுக்கான உணவருந்தும் அறை, ஆய்வகங்கள் என உலகத் தரம் வாய்ந்ததாக அரசுப் பள்ளி நிறுவப்பட்டது.
பள்ளி திறப்பு
இந்த பள்ளியை அமைச்சர் கே.டி.ராமாராவ் திறந்துவைத்தார். அனைத்து வசதிகளுடன் கட்டமைப்புகளுடன் இந்த பள்ளியை நிறுவிய தொழிலதிபர் சுபாஷ் ரெட்டிக்கு நன்றி கலந்த பாராட்டுகளை அமைச்சர் தெரிவித்தார். மேலும், மன உவந்து உதவிய தொழிலதிபர் பெற்றோர் சுசீலா, நாராயணா ரெட்டி ஆகியோரின் பெயரையே பள்ளிக்குச் சூட்ட அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்று அரசுப் பள்ளிகளை நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்ய முன்வர வேண்டும். இது அரசுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுபோன்ற உதவிகளை அரசை வலுப்படுத்தும் கரங்களாக இருக்கும்" என்று தெரிவித்தார்.