டெல்லி: தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை திருத்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து உள்ளதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை (மார்ச். 16) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவுக்கு சம்மன் அனுப்பினர்.
முன்னதாக கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆஜரான கவிதாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி ஆஜராகுமாறும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இருப்பினும் மார்ச் 16 ஆம் தேதி தன்னால் ஆஜராக இயலாது என எம்.எல்.சி கவிதா அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லி விஜய் சவுக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் எம்.எல்.சி கவிதா ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கலால் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது கவிதாவின் சகோதரரும் தெலங்கானா அமைச்சருமான கே.டி. ராமா ராவ், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன் திரண்டனர்.
அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.சி. கவிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது.
இதையும் படிங்க: இந்தியா - ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!