மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சந்தா கோச்சர், 2019ஆம் ஆண்டில் தன் அதிகார வரம்பை மீறி வீடியோகான் நிறுவனத்திற்கு 3ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளார். கடனில் பெரும் தொகை கமிஷனாக சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2009 முதல் 2011 வரையில் வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கியின் கடன் கொள்கைகளை மீறி ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டதாகவும், 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடன் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்தி சந்தா கோச்சரை, ஐசிஐசிஐ வங்கிப் பணி நீக்கம் செய்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், தீபக் கோச்சர், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோருக்குச் சொந்தமான நியூ பவர் ரினிவபில்ஸ், சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சொத்துகளை சிபிஐ முடக்கியது.
இந்நிலையில், வழக்கு குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததை அடுத்து கடந்த மாதம் சந்தா கோச்சர், தீபக் கோச்சர், வேணுகோபால் தூத் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜனவரி 10ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், சந்தா கோச்சர் மற்றும் தீபக் கோச்சர் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்தா கோச்சர் மற்றும் தீபக் கோச்சர் ஆகியோரின் கைது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ம.பி.யில் மூதாட்டியை இழுத்துச் சென்றார்களா காவல் துறையினர்?